Press "Enter" to skip to content

கண்டிப்பா படிக்கனும்னு அவசியம் இல்லை

Santhosh Kumar 0

கண்டிப்பா படிக்கனும்னு அவசியம் இல்லை

#என்னுடைய தேடல்#குழப்பம்#ஆதங்கம்#வருத்தம்#வாழ்வியல்#தற்சார்பு#தீர்வு

நான் எனது வேலையை உதரி இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. தற்போது கிராமப் பொருளாதாரம் தற்சார்பு கட்டமைப்பு மட்டும் தான் மனதில் உள்ளது.

20 மாதங்களாக…
இந்த இரண்டு வருட காலத்தில் பல தேடல்கள் பலப் பயணம் சில போராட்டங்கள் அதில் குறிப்பாக கடந்த 20 மாதங்கள் மிக முக்கியமானது.

உண்மையான தேவை
என்னதான் சம்பளம் வாங்கி வேலையில் இருந்தாலும் ஏதோ இல்லாதது போல் ஓர் வெறுமையான உணர்வு… எவ்வளவோ படித்தும் அதில் திருப்தி இல்லை… எனக்கான வாழ்வின் தேவை இது இல்லை எனத் தோன்றியது… பாரம்பரிய கட்டமைபின் அடிப்படையை எளிமையான வாழ்வியலை கையில் எடுக்க ஆசை…

சில கேள்விகள்
ஏன் எல்லோரும் மண்ணை விட்டு வெளியேறுகிறார்கள்? கிராமத்தை விட்டு நகரத்துக்கும் சிலர் வேறு நாடும் செல்கிறார்கள்? பணம் மட்டுமே போதுமா? மலைவாழ் மக்கள் மட்டும் எந்த நவீன விஞ்ஞானமும் பணமும் இல்லாமல் எப்படி வாழ முடிகிறது? நம் கலாச்சார பண்பாடு நாகரிகம் எங்கே? இது தான் வாழ்க்கை முறையா? பணம் மட்டுமே சம்பாதிக்க அனைத்தையும் இழந்து தான் ஆக வேண்டுமா? இந்த விவசாய முறையில் என்ன பிழை? ஏன் விவசாயிகள் இன்னும் இவ்வளவு துயரத்திற்கு ஆளாகிறார்கள்? விவசாயிகள் தற்கொலை தொடர்வது ஏன்? இந்த கல்வி முறை சரிதானா? இந்த பொருளாதார அமைப்பு சரிதானா?

என எனக்குள் பல கேள்விகள் வாயிலாக தேடல் தொடங்கியது… பல பண்ணைகள் பல பயிற்சிகள் மற்றும் பாரம்பரிய முறைகள், இயற்கை வழி விவசாயம், கல்வி, மருத்துவம் பற்றிய புரிதல் என் எல்லையை விரிவடைய செய்தது.

எது சந்தோசம்
எங்கோ வேலை பார்த்துவிட்டு சனி ஞாயிறு ஊருக்கு சென்று குடம்பத்துடன் இருந்துவிட்டு திரும்பவும் வேலைக்கு சென்று அடுத்த விடுப்பை எதிர்நோக்கியபடி நகர்த்தி எந்த முக்கிய நிகழ்வுக்கும் வரமுடியாமல் வாழும் வாழ்கை தேவையா என சிந்தித்தேன்… வெளிநாட்டு வாழ்க்கை வாழ்பவர்கள் இன்னும் பாவம் வெறும் பணத்தை சம்பாதிக்க அனைத்தையும் இழக்கிறார்கள். ஒரு இடத்தில் சம்பாரித்து அதை கொண்டு உணவுப் பொருட்களை வாங்கி அதுவும் நஞ்சு நிறைந்த உணவை உட்கொண்டு அதனால் மருத்துவ செலவை அதிகரித்து என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் வாழ்வு நகர்கிறது. சிலசமயம் வருடத்திற்கு ஒரு முறை ஏதேனும் காடுகள் மலைப்பிரதேசங்கள் என சுற்றுலா சென்று மனநிறைவு அடைந்தேன்… ஆனால் இவை குறுகிய கால மாய சந்தோஷமே!!!

எனக்கான வாழ்வை வாழாமல் ஏதோ வாழ்வது போல் பணத்திற்கும் நேரத்திற்கும் முக்கியதுவம் தந்த வாழ்வை வாழ்ந்து எனக்கான எந்த அடிப்படை தேவையையும் பூர்த்தி செய்யாமல் என் வாழ்வை நான்தான் வாழ்கிறேன் என்ற சிரத்தையுடன் இருந்தேன்.

மெய்யான தேடல்
இந்த தேடலில் அனைத்தும் புலப்பட்டது எனக்கான உணவை, உடையை, இருப்பிடத்தை என்னால் எப்போது பூர்த்தி செய்ய முடிகிறதோ அப்போதுதான் நான் எனது வாழ்வை முழுமையாக வாழ்வேன். எப்போது நான் பணத்தையும் நேரத்தையும் கண்டு கொள்ளாமல் இருக்கிறேனோ அது தான் உண்மையான வாழ்வு.

வேளாண்மை
ஆரம்பத்தில் வேளாண்மை செய்ய 15 ஏக்கர் வேண்டும் எனத் தோன்றியது… பக்கத்தில் சென்றதும் 3ஏக்கர் இருந்தால் லாபகரமாக ஒருங்கிணைந்த பண்ணை அமைக்க முடியும் எனத் தோன்றியது. அதன் பின் 1ஏக்கர் என்றும் இன்னும் அருகில் சென்றதும் துல்லியமாக ஜே.சி. குமரப்பா கூற்றுப்படி 33 சென்ட் மற்றும் தபோல்கர் கூற்றுப்படி 22சென்ட் இருந்தால் போதும் அடிப்படை வாழ்வியலை சிறப்பாக கையில் எடுக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

இவ்வளவு காலம் மேல்தட்டு மனிதர்கள் அதை சார்ந்த வாழ்வை வாழ்ந்தேன். ஆனால் தற்போது எளிமையான அடிப்படை வாழ்வியலை கையில் எடுக்கும் போது மிகவும் நிறைவாக உள்ளது. தினம் தினம் புதிய பல சுவாரஸ்யமான சம்பவங்கள் தகவல்கள் என நாட்கள் நகர்கிறது. குறிப்பாக இதில் ஆடம்பரம் மற்றும் இயற்கை சிதைவுக்கு வேலையே இல்லை.

வெட்டி கௌரவம்
இன்னும் சிலப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் பெரிய MNCல் வேலைப் பார்கிறார்கள் மாதம் ஒருமுறை ஊர் வருவார்கள் என்று சொல்வதை பெருமையாக நினைக்கிறார்கள் ஆனால. உள்ளே வருத்தம் இருக்கும். ஏன் இந்த பொய்யான வாழ்க்கை. கிடைக்கும் ஒரு வாழ்வை நிம்மதியாக திருப்தியாக சந்தோசமாக வாழ்வதுதான் வாழ்க்கை. எனக்கான ஆத்ம திருப்தி எதில் உள்ளது என நான் கண்டுகொண்டேன். நான் விழித்துவிட்டேன்? நீங்கள்?

இயற்கையை சிதைக்க நமக்கு எந்த உரிமையும் இல்லை. ஆதலால் இந்த வாழ்வியல் தான் சரியாக இருக்கும் என நினைக்கிறேன். எல்லாவற்றுக்கும் தீர்வு உள்ளது அந்த மாற்றத்தை யார் எடுக்கிறார்கள் என்பது முக்கியமில்லை என்னுள் அது நிகழ்கிறதா என்பதுதான் முக்கியம்.

சில அறிவியலாளர்கள் பகுத்தறிவாளர்கள் என்னை முட்டாள் என்கிறார்கள்… அதைப்பற்றி எனக்கு சிறிதும் கவலை இல்லை.

மாடு மேய்தல் கேவலம்,
ஆனால் பாக்கெட் பால் வாங்க வரிசையில் நிற்பது கௌரவம்…

கோழி வளர்த்தல் கேவலம், ஆனால் பிராய்லர் கோழி வாங்க கடையில் நிற்பது கௌரவம்…

உணவு உற்பத்தி பற்றிய கவலையும் இல்லை அக்கரையும் இல்லை, ஆனால் தட்டிற்கு உணவு மட்டும் வந்துவிட வேண்டும்.

இதில் நீங்கள் எந்த ரகம்? பகுத்தறிவாளரா? முட்டாளா?

சிறிதும் ஐயம் வேண்டாம் நான் அந்த கேவலம் ரகத்தை சேர்ந்த முட்டாள் தான்.

மரங்கள் காற்றுக்கு பணம் கேட்டால் தான் மரம் செய்ய (நடவு) விரும்புவீர் போல.

நம் சந்ததியினர் நலமாக வாழ பணம் முக்கியம் என நினைக்கும் நாம் அவர்கள் வாழ அத்தியாவசிய தேவைகளான நீர், நிலம், காற்று, நஞ்சில்லா உணவு மற்றும் வளங்கள் முக்கியம் என ஏன் தோன்றவில்லை…!!!

ஊர் திரும்புங்கள்
அனைவரும் சொந்த ஊர் திரும்புங்கள் உங்கள் ஊரில் உங்களுக்கான வேலை நிறைய உள்ளது…
உலகமயமாதல் கொள்கைக்கு எதிரான கிராமிய தற்சார்பு கொள்கையை கையில் எடுப்போம்…

எப்போது உங்களுக்கான வாழ்வை வாழப்போகிறீர்கள்? நீங்கள் பார்க்கும் வேலையும் நீங்கள் மேற்கொண்ட வாழ்க்கை முறையும் உங்களுக்கு எந்த வருத்தமும் மனக்கசப்பும் தராமல் எதையோ இழப்பது போல் இல்லாமல் எந்தவித தொய்வு வெறுமை இல்லாமல் நிம்மதியாக மகிழ்வாக சென்றால் தாராளமாக பயணியுங்கள். மாறாக அவை இருப்பின் உங்கள் பாதையை திட்டமிடுங்கள். மகிழ்வோடு இருங்கள்!!!

மு.சந்தோஃச் குமார்
[3:19 AM, 5/12/2018] IJCE Santhosh Kumar: சுயசார்பு எனும் தற்சார்பு

நம் குருதியை உறிஞ்சும் அரசு

வரி செலுத்தாமல் வாழும் முறை

நாம் சம்பாரிக்கும் பணத்தில் வருடத்திற்கு இவ்வளவு என்று வருமானவரி செலுத்துகின்றோம். அதுமட்டுமன்றி எல்லாவகையான பொருட்களையும் சந்தையில் தான் வாங்குகிறோம். அதுக்கும் மறைமுகமாக அந்த வரி இந்த வரி எனச் செலுத்தி தான் வாங்குகிறோம். இப்படி நம்ம கிட்ட இருந்து வாங்கும் வரிப் பணத்தை வைத்து தான் அரசு கஜானா நிரம்புகிறது. ஆனால் அந்த தொகையை இதுவரை எந்தவித முக்கியமான திட்டத்திற்கும் செலவு செய்யாமல் தேவையில்லாத கையாலாகாத திட்டத்திற்கு செலவு செய்கிறது. ஏன் என்று குரல் கொடுத்தால் அதற்கான விளக்கமும் கிடைத்தபாடில்லை. அரசே நாம் தான் ஆனால் நமக்கே பதில் தருவதில்லை.

சில நாடுகள் வரியே வாங்காமல் தன் நாட்டு மக்களுக்கு நல்ல பயனுள்ள திட்டங்களை தருகின்றனர். ஆனால் நம் நாட்டில் அனைத்தையும் புடுங்கிக் கொண்டு எந்த நல்ல திட்டமும் இல்லை. நமது உழைப்பை நமது பணத்தை நமது குருதியை உறிஞ்சுகின்றன. அதற்கு பல உதாரணங்கள் உள்ளன கல்வி மற்றும் மருத்துவம் தனியாரிடம் உள்ளது. இயற்கை விவசாயம் அழிவு, கார்ப்ரேட் நிறுவனங்களின் வருகை, ஏனைய இயற்கை வளங்கள் சுரண்டல் என அனைத்தும் அழிந்தன.

வருங்கால சந்ததியினர்க்கு ஒன்றுமே கிடைக்காத சூழலை தான் உருவாக்கி கொண்டிருக்கிறோம். இதையெல்லாம் பார்க்கும் போது நாம் ஏன் வரி செலுத்த வேண்டும் என்று தோன்றுகிறது?

வரி செலுத்தாமல் இருக்க வழி உள்ளது

நம் முன்னோர்கள் வாழ்வியல் படி நாம் அனைவரும் தற்சார்புக்கு மாறினால் நாம் எந்த சந்தையிலும் எதுவும் வாங்க வேண்டாம். யாருக்கும் வரி செலுத்த வேண்டாம்.

என்னிடம் இருந்து அரசுக்கு எந்த வகையிலும் பணம் செல்லாத போது நான் ஏன் இந்த அரசு நடவடிக்கைகள் பற்றி கவலை பட வேண்டும்?

இந்தியாவில் மொத்தம் 70% கிராமங்கள் தான் உள்ளது. அனைத்தும் முன்பு போல் தற்சார்புக்கு மாறினால் உண்மையான கேஸ்லஸ் எகனாமிக்கு (cashless economy) இந்தியா மாறிவிடும் அதுதான் பண்டமாற்று முறை.

இயற்கை வளங்கள் காக்கப்படும், அனைவருக்கும் எல்லாம் கிடைக்கும். நஞ்சில்லா உணவு, இயற்கை விவசாயம், மரபு வழி கல்வி, மருத்துவம் என்று எல்லாம் சீராக்கும். அனைத்து வளங்களும் நம்முடன் இருக்கும். தற்சார்பை நோக்கி பயணிப்போம்.

மு.சந்தோஃச் குமார்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.