விடுதலையை நோக்கிய பயணம்
எது தேவை! எது வேண்டும்!! எது சுதந்திரம்!!!
இதே வேகத்தில் இயற்கையை நுகர்ந்தால் 2100ம் ஆண்டை மனித இனம் பார்க்கப்போவதில்லை.
வேலை, பணம், படித்து வாங்கிய பட்டம், கௌரவும் என ஒரு நாள் அனைத்தையும் குப்பையில் எறிவேன். நவீன உலகின் அடிமை கட்டமைப்பிலிருந்து ஒரு நாள் விடுபடுவேன்.
பணத்திற்காக எனது தனித்தன்மையை வெளிபடுத்தாமல், அவர்களின் தவறான போக்கையும் கண்டிக்காமல், சொல்லும் அனைத்தையும் வெறுமனே ஏன் என கேளாமல் வாழும் அடிமை வாழ்வை ஒரு நாள் உடைத்தெரிவேன்.
பணம், நேரம் என இரண்டின் பின்னாலும் நவீன கட்டமைப்பின் மாய பிம்பத்திலும் ஓயாமல் ஓடும் வாழ்வை திருத்தியமைப்பேன்.
இயற்கைக்கு புறம்பான எந்த செயலும் செய்யாமல் வாழ்வதே ஞானமார்க்கம். இயற்கையை சிதைத்து நிறைய பாவங்களை செய்துகொண்டு இருக்கிறோம். அதிலிருந்து விடுபட்டு புனிதமான அடிப்படை வாழ்வியலை கையிலெடுப்பேன்.
எளிமையாக வாழ்வது என்பது கஞ்சத்தனம் அல்ல. அது இயற்கையின் ஆழமான புரிதலின் வெளிப்பாடே. அதுவே சந்ததியின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதாகும்.
எனக்கான இந்த வாழ்க்கை முறையை நான் ஏன் அடிமையாகவும் பாவங்களின் தொகுப்பாகவும் அதன் பிம்பமாகவும் வாழவேண்டும்?
ஆடம்பரமே பேராசையின் உச்சம் தான். அதுவே இயற்கையை சுயநலமாக சுரண்டி சிதைப்பது பாவங்கள் தான்.
தங்கம் மற்றும் ஏனைய உலோக பொருட்கள் வேண்டும் என்றால் அதனால் பல காடுகள் அழிக்கப்படுகிறது சுரங்கம் எனும் கல்லறைகள் உருவாக்கின, அதில் என்ன பெருமை?
நாம் பயன்படுத்தும் தேவைக்கு மீறிய அனைத்தும் ஆரம்பரத்தின் பேராசை சாயலே அதனால் இயற்கை சமநிலையின்றி அதீதமான சுரண்டலுக்கு உள்ளாகிறது.
ஒரு வீடு கட்டினால் கூட அதிலும் ஆடம்பரம் தான், அதற்கான பயன்படுத்தும் கட்டுமான பொருட்களால் எத்தனை மலைகள் எத்தனை ஆறுகள் எத்தனை கடுகள் காணாமல்போகிறது என்ற சிந்தனை கூட இல்லை.
கல்வி மருத்துவம் என வர்த்தகமான சூழலை உருவாக்கி அதில் பழக்கப்பட்டு வாழ்கிறோம்.
இன்னும் பதினைந்து வருடத்தில் குடிக்க தண்ணீர் இருக்காது, சுவாசிக்க தூய்மையான காற்று இருக்காது, உண்ண உணவு கிடைக்குமா என்று தெரியாது இந்த சூழலில் நாம் அதிவேகமாக எதை நோக்கி எதற்காக இவ்வளவு வேகமாக ஓடுகிறோம். உங்கள் வாழ்வே கேவிக்குறிதான் இதில் உங்கள் சந்ததியினரின் எதிர்காலத்தின் பொருளாதார பார்வை வேறு…??
இதை அனைத்து விதத்திலும் சிந்தித்து தான் முடிவு செய்கிறேன். விரைவில் ஊர் திரும்பி எனக்கான எளிமையான வாழ்வியல் கட்டமைப்பை எனது ஒத்த சிந்தனைகள் உடையவரோடு சேர்ந்து ஒரு சமூகமாக வாழ போகிறேன். அப்போது நிச்சயமாக இந்த நவீன அடிமை மாய கட்டமைப்பிலிருந்து விடுபட்டு பூரண சுதந்திரத்தை அடைவேன். அரசையோ, பெருநிறுவனங்களையோ எதற்காவும் நாடாமல் அதனிடம் எதையும் எதிர்பாராமல் தன்னிறைவு அடைவேன். அந்த நாளுக்காக காத்திருக்கிறேன். அதற்கான தேடுதலையும் சிந்தனையும் ஒருசேர இணைத்து பயணிக்கிறேன்.
இயற்கையை ஆழமாக நேசிப்பவர், சூழலியல் சிந்தனை இருப்பவர், தனது சந்ததியினர் வாழ்வு பிரகாசமாக இருக்க நினைப்பவர்கள்… அரசை, பெருநிறுவனங்களை விமர்சிக்கும் முன் அதை எதிர்பார்க்காத வாழ்வை அடைந்த பின் விமர்சியுங்கள். நெகிழிகளை தவிர்த்தால் தான் நெகிழிக்கு எதிராக போராட முடியும். இயற்கை உணவை உற்பத்தி செய்து உண்டால் தான் நவீன வேளாண்மையை எதிர்க்க முடியும். மணல் இல்லாமல் மலை கற்களை எதிர்பார்க்காமல் கட்டுமானம் அமைத்து இருந்தீர்களானால் உங்களால் மணல் திருட்டுக்கு எதிராகவும் மலை சுரண்டலுக்கு எதிராகவும் பேசமுடியும்.
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தினால் தான் வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் அழிவுக்கு வழிவகுக்கும் மின்சார உற்பத்திக்கு உங்களால் எதிர்ப்பு தெரிவிக்க முடியும். மரபுக்கு திரும்பாமல் அனைத்தையும் எதிர்ப்பது மடத்தனமே. தனது செயலில் எதையும் மாற்றாமல் வெறுமனே போராட்டம் எதிர்ப்பு என்று கிளம்பினால் அதில் உயிரோட்டமே இல்லை. 35 வருடமாக சட்டை கூட அணியாமல் ஐயா நம்மாழ்வார் இயற்கை வளச்சுரண்டலுக்கும் அழிவுக்கும் எதிர்ப்பு தெரிவித்தார் எனில் அவர் அதை உயிரோட்டமாக பார்த்தார். இயற்கையோடு வாழ்ந்தார். அதனால் அவரால் அனைத்தையும் முழுமனதுடன் எதுர்க்க முடிந்தது.
தேவையானதில் கவனம் செலுத்துங்கள். ஆடம்பரமான பேராசையால் தான் இயற்கை அதீதமாக சுரண்டப்பட்டு அதன் சமநிலை பாதிக்கப்படுகிறது.
உடுத்த உடை வேண்டும் தான் அதற்காக விலை உயர்ந்த ஆடைகள் தேவையில்லை. இருக்க வீடு வேண்டும் தான் அதற்காக மாடமாளிகை தேவையில்லை. நடக்க காலணி வேண்டும் தான் அதற்காக பல சோடிகள் தேவையில்லை. தேவைக்கு மீறிய அனைத்தும் பாவங்களே அதனால் இயற்கை சிதைக்கப்படுகிறது.
மாற்றம் என்பது சொல் அல்ல. செயலே… அந்த செயல் தான் நம்மை உயிரோட்டமாக இயக்கும்.
சந்ததியினர் வேண்டுமா அவர்கள் வாழ்வு சிறக்க வேண்டுமா அப்போது மரபுக்கு திரும்புங்கள். மாறாக ஆடம்பரமாக தான் வாழ்வேன் எனில் உங்கள் சந்ததி அழிவை தான் சந்திக்கும்.
மரபு சிந்தனையும் தேடலையும் விரிவுபடுத்துங்கள், ஆடம்பரமற்ற எளிமையான வாழ்வியல் தேவையை பூர்த்து செய்யுங்கள். அதுவே முழுமை பெற்ற வாழ்வியல். எந்த பாவமும் யாருக்கும் எந்த தீங்கும் இல்லாத வாழ்க்கை முறை. இயற்கைக்கு தரும்புவதே அனைத்து விதமான பிரச்சனைக்குமான நிரந்தர தீர்வு.
நவீனக் கட்டமைப்பின் தொழில்நுட்ப அடிமையாக இருந்து கொண்டுதான் விடுதலையை பற்றி பதிவு செய்ய வேண்டியதாக உள்ளது.
மகிழ்வோடு இருங்கள்!!!
தொகுப்பு:
மு.சந்தோஃச் குமார்
Yes