Press "Enter" to skip to content

சுதந்திர மாயை

Santhosh Kumar 1

எது உண்மையான சுதந்திரம்?

சுதந்திரம் என்ற சொல்லில் மட்டும் சுதந்திரத்தை வைத்துகொண்டு வருடா வருடம் கொண்டாடும் அடிமைளுக்கு சுதந்திரதின வாழ்த்துக்கள்.

உண்மையான சுதந்திரம் என்பது பெருநிறுவனங்களில் அடிமையாக இல்லாமல், தொழிற்சாலையின் பொருட்களை பயன்படுத்தாமல், நமக்கான உணவை நாமே தாற்சார்பு முறையில் இயற்கை வழியில் விளைவித்து உண்பதே, நமக்கான நோய்களுக்கு கார்பரேட் மருத்துவமனையை நாடாமல் நாமே அதற்கான தீர்வை முன்னெடுத்து, நமக்கான வீட்டை நிறுவன பொருட்கள் இல்லாமல், சூழல் சார்ந்த கட்டுமானத்தை நமது விருப்பப்படி கட்டமைத்து, நமது உடைகளை நாமே தயாரித்து (நெசவு & இயற்கை சாயம்) ,நமது பிள்ளைகளின் கல்வியை தனியாரிடம் ஒப்படைக்காமல் நாமே கல்வியை போதித்து, நமக்கான தேவையை நாமே நமது சமூகமாக இணைந்து பூர்த்தி செய்து யாரையும் நம்பி இல்லாமல் யாரிடமும் கையேந்தாமல் அடிமை வாழ்வில் இருந்து மரபு வாழ்வுக்கு நகர்வதே உண்மையான சுதந்திரம்.

நமக்கான நீர், உணவு, உடை, இருப்பிடம், கால்நடைகள், சூழல், கல்வி, மருத்துவம், பொருட்கள், சாதனங்கள் என அனைத்திலும் தன்னிறைவு அடைந்து அடிமை கட்டமைப்பில் இருந்து வெளியேறும் போது அனைவரும் சுதந்திரம் அடைந்தவர்களே. இயற்கையை சிதைக்காமல், நிறுவன பொருட்களை சாராமல், வளர்ச்சி மாயை இல்லாமல் எளிமையான அடிப்படை தற்சார்பு வாழ்வியலை கையில் எடுப்போம்.

தனிமனித விடுதலை தற்சார்பிலிருந்து உருவாகிறது.

நவீன உலகின் அடிமை கட்டமைப்பிலிருந்து விடுபடுவோம்.

பணம், நேரம் என இரண்டின் பின்னாலும் நவீன கட்டமைப்பின் விளம்பர மாய பிம்பத்திலும் ஓயாமல் ஓடும் வாழ்வை திருத்தியமைப்போம்.

நமக்கான உணவை, மருந்தை, உடையை, பயன்பாட்டு பொருளை, கல்வியை ஏதோ ஒரு பன்னாட்டு நிறுவனம் தான் முடிவு செய்யவேண்டுமா? நாமே அடைய முடியாதா நமது முன்னோர்களின் வழியில்?

தற்சார்பு – சுயசார்பு என்பதே நமது தேவையை நாமே பூர்த்தி செய்வது. எளிமையாக இயற்கையுடன் இணைந்து வாழ்வது அறத்தின் வழி வாழ்வது.

இயற்கைக்கு புறம்பான எந்த செயலும் செய்யாமல் வாழ்வதே ஞானமார்க்கம்.

எளிமையாக வாழ்வது என்பது கஞ்சத்தனம் அல்ல. அது இயற்கையின் ஆழமான புரிதலின் வெளிப்பாடே. அதுவே சந்ததியின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதாகும்.

ஆடம்பரமே பேராசையின் உச்சம் தான். இயற்கையை சிதைக்க நமக்கு எந்த உரிமையும் இல்லை.

மாடு மேய்தல் கேவலம்,
ஆனால் பாக்கெட் பால் வாங்க வரிசையில் நிற்பது கௌரவம். கோழி வளர்த்தல் கேவலம், ஆனால் கோழி வாங்க கடையில் நிற்பது கௌரவம் என பார்க்கும் மாய உலகில் வாழ்கிறோம்.

உணவு உற்பத்தி பற்றிய கவலையும் இல்லை அக்கரையும் இல்லை, ஆனால் தட்டிற்கு உணவு மட்டும் வந்துவிட வேண்டும்.

மரங்கள் காற்றுக்கு பணம் கேட்டால் தான் மரம் செய்ய (நடவு) விரும்புவீர் போல.

தங்கம் மற்றும் ஏனைய உலோக பொருட்கள் வேண்டும் என்றால் அதனால் பல காடுகள் அழிக்கப்படுகிறது சுரங்கம் எனும் கல்லறைகள் உருவாகின, அதில் என்ன பெருமை?

நாம் பயன்படுத்தும் தேவைக்கு மீறிய அனைத்தும் ஆரம்பரத்தின் பேராசை சாயலே அதனால் இயற்கை சமநிலையின்றி அதீதமான சுரண்டலுக்கு உள்ளாகிறது.

ஒரு வீடு கட்டினால் கூட அதிலும் ஆடம்பரம் தான், அதற்கான பயன்படுத்தும் கட்டுமான பொருட்களால் எத்தனை மலைகள் எத்தனை ஆறுகள் எத்தனை காடுகள் காணாமல்போகிறது என்ற சிந்தனை கூட இல்லை.

கல்வி மருத்துவம் என வர்த்தகமான சூழலை உருவாக்கி அதில் பழக்கப்பட்டு வாழ்கிறோம்.

இன்னும் பதினைந்து வருடத்தில் குடிக்க தண்ணீர் இருக்காது, சுவாசிக்க தூய்மையான காற்று இருக்காது, உண்ண உணவு கிடைக்குமா என்று தெரியாது இந்த சூழலில் நாம் அதிவேகமாக எதை நோக்கி எதற்காக இவ்வளவு வேகமாக ஓடுகிறோம். உங்கள் வாழ்வே கேவிக்குறிதான் இதில் உங்கள் சந்ததியினரின் எதிர்காலத்தின் பொருளாதார பார்வை வேறு…??

நம் சந்ததியினர் நலமாக வாழ பணம் முக்கியம் என நினைக்கும் நாம் அவர்கள் வாழ அத்தியாவசிய தேவைகளான நீர், நிலம், காற்று, நஞ்சில்லா உணவு மற்றும் வளங்கள் முக்கியம் என ஏன் தோன்றவில்லை…!!!

இதை அனைத்து விதத்திலும் சிந்தித்து அதற்கான விடையாக விரைவில் ஊர் திரும்பி அவரவர்கான எளிமையான தற்சார்பு வாழ்வியல் கட்டமைப்பை தனது ஒத்த சிந்தனைகள் உடையவரோடு சேர்ந்து ஒரு சமூகமாக வாழ முயற்சியுங்கள். அப்போது நிச்சயமாக இந்த நவீன அடிமை மாய கட்டமைப்பிலிருந்து விடுபட்டு பூரண சுதந்திரத்தை அடையலாம். அரசையோ, பெருநிறுவனங்களையோ எதற்காவும் நாடாமல் அதனிடம் எதையும் எதிர்பாராமல் தன்னிறைவு அடையலாம். அதற்கான தேடுதலையும் சிந்தனையும் ஒருசேர இணைத்து பயணத்தை தொடருங்கள். உலகமயமாதல் கொள்கைக்கு எதிரான கிராம தற்சார்பு கொள்கையை கையில் எடுப்போம்.

மாற்றம் என்பது சொல் அல்ல. செயலே… அந்த செயல் தான் நம்மை உயிரோட்டமாக இயக்கும்.

சந்ததியினர் வேண்டுமா அவர்கள் வாழ்வு சிறக்க வேண்டுமா அப்போது மரபுக்கு திரும்புங்கள். மாறாக ஆடம்பரமாக தான் வாழ்வேன் எனில் உங்கள் சந்ததி அழிவை தான் சந்திக்கும்.

மரபு சிந்தனையும் தேடலையும் விரிவுபடுத்துங்கள், ஆடம்பரமற்ற எளிமையான வாழ்வியல் தேவையை பூர்த்து செய்யுங்கள். அதுவே முழுமை பெற்ற வாழ்வியல். இயற்கைக்கு தரும்புவதே அனைத்து விதமான பிரச்சனைக்குமான நிரந்தர தீர்வு.

இது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று அல்ல. சாத்தியமான ஒன்றுதான். கிரமத்திற்கு திரும்புதல் என்பது உயுரோட்டமான வாழ்க்கைக்கு திரும்புவது. இப்படி ஒரு வாழ்க்கை முறையால் மட்டுமே அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும். எல்லோரும் ஒற்றுமையாக இயற்கையின் அரவணைப்பில் வாழலாம்.

விடுதலை பெற்றவர்களாக, தற்சார்பு அடைந்தவர்களாக மாறுவோம். நமது குடும்பம் விடுதலை அடையட்டும். நமது குடும்பம் தற்சார்புத் தன்மையை அடையட்டும். இந்த மிக மோசமான நிறுவனங்களின், அரசுக் கட்டமைப்பின் பிடியிலிருந்து விடுபட்டு ஒட்டுமொத்தச் சமூகமும் தற்சார்பு தன்மை அடையட்டும்.

இன்னும் பலநூறு வருடங்கள் மனித குலம் வாழ்வதற்கு வழி இல்லையென்றாலும் குறிப்பிட்ட சமூகமாவது தப்பிப் பிழைத்து நிம்மதியான வாழ்க்கை வாழ்வதற்கான ஒரு சூழலை உருவாக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கறது. நம்மோடு படைக்கப்பட்ட உயிர்கள், நமக்கு முன்பு படைக்கப்பட்ட உயிர்கள், எல்லா உயர்களும் இன்பமாக வாழட்டும். எல்லாம் இன்பமயம். எல்லாம் நலமே அகுக!

மு.சந்தோஃச் குமார்

  1. Manickam Manickam

    நல்ல பதிவு நண்பா. ஆனால் நிலம் இல்லாதவர்கள் என்ன செய்யலாம்?

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.