Press "Enter" to skip to content

இயற்கை வேளாண்மைக்கு உதவும் வெளவால்கள்

agriculturalist-hexacube 0

இயற்கை வேளாண்மைக்கு உதவும் வெளவால்கள்

காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதையாக கொரோனா வைரஸ் உண்டானதற்கு வெளவால்கள்தான் காரணம் என்று பழி போட்டுக்கொண்டிருக்கிறோம். இதனால் உலகெங்கும் இப்போது வெளவால்கள் கொல்லப்படுகின்றன அல்லது தங்கள் வாழ்விடங்களை விட்டு விரட்டப்படுகின்றன. இது உலகம் தனக்கு மட்டுமே சொந்தமானது என்ற மனிதனின் தான்தோன்றித்தனத்தையே காட்டுகிறது. நம் நாட்டில் வெளவால்கள்மூலம் கொரோனா வைரஸ் பரவுவதற்கான எந்தவிதமான ஆதாரமும் கிடையாது. பார்க்கப்போனால் மனிதனிடமிருந்துதான் அது புலி, சிங்கம் போன்ற வளர்ப்பு விலங்குகளுக்குப் பரவிக்கொண்டிருக்கிறது.

வெளவால்களில் உணவுப் பழக்கத்தை வைத்து இரண்டு வகை உண்டு. அவை பூச்சி உண்ணும் வெளவால் மற்றும் பழம் தின்னும் வெளவால். பூச்சி உண்ணும் வெளவால்கள் இரவில் நமக்குத் தொல்லை கொடுக்கும் கொசு, பூச்சி மற்றும் புழுக்களைத் தின்று நன்மை செய்கின்றன.

கொசுக்களை ஒழிப்பதற்கு கோடிக்கணக்கில் செலவிடும் நாம் அவற்றின் எதிரியான வெளவால்களைப் பற்றி யோசிப்பதே இல்லை. நகரங்களில் கொசு ஒழிப்புப் பணி செய்யும் வெளவால்கள், கிராமங்களில் இரவில் பயிர்களை மேயும் அந்துப் பூச்சிகளைத் தின்று உழவர்களைக் காப்பாற்றுகின்றன. இயற்கை வேளாண்மை செய்பவர்கள் வெளவால்களையும் கண்டிப்பாக வளர்க்க வேண்டும். இதற்கு சிறிய வாயுள்ள பெட்டிகளை மரங்களில் கட்டி வைக்கலாம் அல்லது வெளவால்களின் இயற்கை வீடுகளாக விளங்கும் பனை, ஈச்சை மரங்களை வளர்க்கலாம். வெளவால்கள் கொசுக்களைப் பிடிப்பதோடு அவற்றின் புழுக்களையும் நீரின் மேல் பறந்தவாறு பி‍டித்துத் தின்கின்றன.

எங்கள் வீட்டில் பல ஆண்டுகளாக வெளவால்கள் வளர்ந்து வருகின்றன. அவை ஜன்னல்களில் ‍அடைவதால் நாங்கள் ஜன்னல் கதவுகளை மூடுவதே இல்லை. இரவில் தூங்கும்போது வீட்டிற்குள் ‍அவை பறந்து வந்து கொசுவலைக்கு மேலே மொய்த்துக் கொண்டிருக்கும் கொசுக்களை வேட்டையாடுகின்றன. ஒரு வெளவால் ‍அடைவதற்கு ஒரு சதுர அங்குல இடமே போதுமானது. வாடகையாக நைட்ரஜன் சத்து நிறைந்த உரம் கிடைக்கும்.

இதேபோல் பழம் தின்னும் வெளவால்களும் எங்கள் தோட்டத்திற்கு வந்து இலுப்பை, நெட்டிலிங்கம், வேம்பு, அத்தி போன்ற மரக்கன்றுகளை இலவசமாக நட்டுவிட்டுச் செல்கின்றன. இவை பெரும்பாலும் மரங்களிலேயே அடைகின்றன.

எங்கள் ஊர் சிவன் கோயிலில் நூற்றுக்கணக்கான வெளவால்கள் ‍அடைகின்றன. ஒரு வெளவால் ஒரு நாளைக்கு 7000 கொசுக்களைப் பிடித்துத் தின்கிறது என்றால் மொத்தம் எத்தனை டன் கொசுக்கள் / பூச்சிகள் ஒரு நாளில் அழிக்கப்படுகின்றன என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். வேளாண்மை இல்லாத வறண்ட காலங்களில் வயல் பூச்சிகள் கிடைக்காததால் கொசுக்களை மட்டுமே இவை உணவாகக் கொள்கின்றன. தூய்மை இந்தியா திட்டத்தில் உண்டான கழிப்பறைத் தொட்டிகளிலிருந்து கிளம்பும் கொசுக்களால் கிராமத்து வெளவால்களுக்கு இப்போதெல்லாம் உணவுப் பஞ்சம் ஏற்படுவதே இல்லை.

திறந்தவெளி சாக்கடை ஓடும் புதுச்சேரி, காரைக்கால் போன்ற இடங்களில் பொதுவாகவே கொசுத்தொல்லை அதிகமாக இருக்கும். இவற்றைப் பிடிப்பதற்காகவே பக்கத்து கிராமங்களிலிருந்து வெளவால்கள் இரவில் நகரங்களுக்கு வந்து செல்கின்றன. புதுச்சேரியில் மழைநீர் வடிகாலுக்கடியில் ஏகப்பட்ட வெளவால்கள் தொங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். இவை தம் இரவுப் பணியை மாலை 6 மணிக்குத் தொடங்கி காலை 6 மணி வரை ஓய்வின்றி செய்து கொசுக்களால் பரவும் நோய்களிலிருந்து நம்மைக் காப்பாற்றுகின்றன. இவற்றைத் தொல்லை செய்யாமல் இருப்பதே நாம் அவற்றுக்குச் செய்யும் உதவியாகும்.

பூச்சி மருந்தை போண்டா மாவில் கலந்து உண்டாலும் சாவுதான்; காய்கறி, கீரைகள்மீது தெளித்து உண்டாலும் சாவுதான். இரண்டுக்கும் ஒரே வித்தியாசம், முதலாவதில் உடனே உயிர் போகும்; இரண்டாவதில் சில நாள் கழித்துப் போகும். இது நன்கு தெரிந்திருந்தும் கிலோ கணக்கில், லிட்டர் கணக்கில் பூச்சி மருத்துகளை வயலில் கொட்டும் நம் உழவர்களின் மனநிலையை என்னவென்று கூறுவது? “நமக்குப் பொருள் விற்றால் போதும், அதைப் பயன்படுத்துபவர்கள் எக்கேடு கெட்டுப்போனால் நமக்கென்ன” என்றுதானே எடுத்துக்கொள்ள வேண்டும்? இப்படி நச்சு வேளாண்மை செய்பவர்களுக்கு நடுவில் மெய்வருத்தம் பாராமல் இயற்கை இடுபொருட்களை மட்டுமே வயலில் இட்டு வருமானம் பார்ப்பவர்களும் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்வதற்காகவே இந்தக் கட்டுரை.

மற்ற பூச்சிக்கொல்லிகளான சிலந்தி, தவளை, ஓணான், பறவை போன்றவற்றுக்கும் வெளவால்களுக்கும் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. அவை பகலில் வேட்டையாடும் அல்லது தரையிலிருந்து வேட்டையாடும். ஆனால் வெளவால்கள் மட்டுமே அந்தி நேரத்திலும், இரவிலும் பறக்கும் பூச்சிகளை தங்களது ரேடார் கருவியைக் கொண்டு குறிபார்த்து வீழ்த்துகின் றன. ஆந்தைகள் அமர்வதற்கு வயலில் மூங்கில் கவட்டைகளை நட்டு வசதி செய்து கொடுப்பதைப்போல வெளவால்களுக்கும் வசதி செய்து கொடுத்தால் இயற்கை வேளாண்மை திறம்பட நடைபெறும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

முனை. இராமலிங்கம்
சூழல் ஆர்வலர்
கஞ்சா நகரம்
இயஞ்சல்: theravalavan@gmail.com

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.